செல்ஃபி மோகத்தில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 2 தமிழர்கள்..!
தமிழகத்தினை சேர்ந்த 4 பேர் கோவாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதற்காக வடக்கு கோவா வந்த அவர்கள் ஆகுவாடா கோட்டை அருகே சிகுரிம் பீச் பகுதிக்கு நேற்று காலை சென்றுள்ளனர்.
அவர்கள் பாறைகள் அதிகம் நிறைந்த பகுதியில் இருந்தபடி தங்களது போன்களில் படம் பிடித்து கொண்டு இருந்துள்ளனர். திடீரென உயரே எழுந்து வந்த அலை ஒன்று பாறையில் அமர்ந்த ஒருவரை கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது. அவர் நீருக்குள் மூழ்கி உயிரிழந்து விட்டார்.
அவர் சசிகுமார் வாசன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
இதேபோன்று தமிழகத்தில் இருந்து 8 பேர் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் கடந்த சனிக்கிழமை வடக்கு கோவாவின் பாகா பீச்சிற்கு சென்றுள்ளனர்.
அவர்களில் 3 பேர் நீர் சூழ்ந்த பாறை பகுதிகளில் இருந்தபடி தங்களது மொபைல் போன்களில் செல்ஃபி எடுத்துள்ளனர். அவர்களை நோக்கி சீற்றத்துடன் வந்த கடல் அலை ஒன்று மூவரையும் இழுத்து சென்றுள்ளது.
இதில் 2 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். ஆனால் வேலூரை சேர்ந்த தினேஷ் குமார் ரங்கநாதன் (வயது 28) என்பவர் நீருக்குள் மூழ்கி உயிரிழந்து விட்டார்.
கோவா பீச்சில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தினை சேர்ந்த 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன என போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
கோவா கடற்கரை பகுதியில் நீச்சல் அடிப்பதற்கு ஜூன் 1ந்தேதியில் இருந்து 4 மாதங்களுக்கு தடை விதித்து கோவா அரசு கடந்த மாதம் அறிவுறுத்தல் வழங்கி இருந்தது.