செம்மரம் வெட்ட சென்ற கும்பலை சேர்ந்த ஒருவர் கைது..!
திருப்பதி அருகே செம்மரம் வெட்டுவதற்காக சென்றதாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை செம்மர கடத்தல் தடுப்புப்பிரிவு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீவாரிமெட்டு மலையடிவாரத்தில் நேற்றிரவு ரோந்து சென்ற அவர்கள், வனப்பகுதிக்குள் ஒரு கும்பல் சென்றதைப் பார்த்து, துரத்திச் சென்றனர். ஆனால் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த பொருள்களை இருளில் வீசி விட்டு தப்பினர். அவர்களில் ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார்.
அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையைச் சேர்ந்த ராமராஜ் என்று கூறப்படுகிறது. தப்பி ஓடியவர்களை செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப் படையினர் தேடி வருகின்றனர். கைதான ராமராஜிடம் நடத்திய விசாரணையில், குமார் என்பவர் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து, செம்மரம் வெட்டி வருமாறு 15 பேரை அனுப்பியது தெரியவந்துள்ளது.