சென்னையில் 2வது நாளாக விடிய விடிய சோதனை ..!
தொடர் வழிப்பறி சம்பவங்கள் எதிரொலியாக சென்னை முழுவதும் 2ம் நாள் நடத்தப்பட்ட அதிரடி வாகன சோதனையில் முக்கிய குற்றவாளிகள் உட்பட 564 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கத்திமுனையில் தொடர் வழிப்பறி சம்பவங்களை தொடர்ந்து இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் ஜெயராம், சாரங்கன் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக 2 ஆயிரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் நாளான நேற்று முன்தினம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள் உட்பட 3,081 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. இதில் சந்தேகத்தின் பேரில் 442 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 20 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 7 பேரும், 109,110 பிரிவின் கீழ் 95 பேர் என மொத்தம் 564 ேபரை போலீசார் கைது செய்தனர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 53 பேரையும் போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர்.