சூரிய மின்னுற்பத்தி கருவிகள் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் புகாருக்கு இந்தியா மறுப்பு!
உலக வர்த்தக கழக விதிகளுக்கு மாறாக சூரிய மின்னுற்பத்திக் கருவிகளை விநியோகிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்தியா பாரபட்சம் காட்டியதாக அமெரிக்கா புகார் செய்தது. சூரிய மின்னுற்பத்தியில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டுக் கருவிகளையே பயன்படுத்துமாறு செய்ததன் மூலம், உலக வர்த்தக கழக விதிகளை இந்தியா மீறிவிட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.
சூரிய மின்னுற்பத்தி கருவிகள் இறக்குமதியில் விதிகளுக்கு மாறாக பாரபட்சம் காட்டிய இந்தியா மீது வர்த்தக தடைகளை விதிக்க வேண்டும் என உலக வர்த்தக கழகத்தில் அமெரிக்கா கடந்த மாதத்தில் முறையிட்டது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, அமெரிக்காவின் புகார் அடிப்படையற்றது என உலக வர்த்தக கழகத்தில் தெரிவித்துள்ளது. உரிய வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் அமெரிக்கா இந்த புகாரை கூறியுள்ளதாகவும், வர்த்தக தடை விதிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கை முறையானது அல்ல எனவும் இந்தியா வாதிட்டுள்ளது.
source: dinasuvadu.com