சி.பி.ஐ. இயக்குநரை விடுமுறையில் அனுப்பிய மத்திய அரசின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கார்கே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.
சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். ‘சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்து வந்த நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது‘ என கூறினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், எதிர்க்கட்சி தலைவர், பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகிய 3 பேர் கொண்ட குழுவே சட்டத்தின்படி சி.பி.ஐ. இயக்குநரை நியமனம் செய்யவோ அல்லது நீக்கவோ செய்வதற்கான முடிவொன்றை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
அவர் பின்னர், சி.பி.ஐ. இயக்குநருக்கு எதிராக மத்திய கண்காணிப்பு ஆணையம் நடவடிக்கை எடுப்பதற்கு எந்த அதிகாரமும் கிடையாது என கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, தன்னிச்சையாக சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவை விடுமுறையில் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது சட்டவிரோத செயல் மற்றும் சி.பி.ஐ. சட்டத்தின்படி விதிமீறலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com