சாமி ஊர்வலத்துக்காக மூடப்பட்ட விமான நிலையம்….!!
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது.
பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள சிலைகளை ஆண்டுக்கு இருமுறை (அக்டோபர்-நவம்பர், மார்ச்-ஏப்ரல்) அங்குள்ள சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று புனித நீராட்டுவார்கள். பின்னர் சாமி சிலைகள் மீண்டும் கோவிலுக்கு திரும்பும்.
இந்த கடற்கரை திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு பின்புறம் உள்ளது. இதனால் விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாக சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டின் புனித நீராட்டு விழாவையொட்டி பத்மநாபசுவாமி கோவில் சிலைகள் நேற்று மாலை 4 மணிக்கு விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாக ஊர்வலமாக சென்றது. பின்னர் நீராட்டு முடிந்து 9 மணிக்கு விமான நிலையம் வழியாக மீண்டும் கோவிலுக்கு திரும்பியது. இதையொட்டி முன்னேற்பாடாக விமான நிலையத்தை 5 மணி நேரம் மூடுவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கு இடைப்பட்ட நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை மற்றும் ஷார்ஜா நகரங்களுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் இரு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
1932–ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பிருந்தே பல நூற்றாண்டு காலமாக இதே பாதையில் பத்மநாபசுவாமி கோவில் ஊர்வலம் நடைபெற்று வருவதால் வருடத்தில் 2 முறை இதுபோல் விமான நிலையம் 5 மணி நேரத்துக்கு மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com