சபரிமலை விவகாரம் : என்ன முடிவு ..? இன்று ஆலோசனை கூட்டம்..!!
சபரிமலை விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இன்று ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள மாநில அரசு இறங்கியுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சபரிமலையின் பாரம்பரிய விதிகளை சீர்குலைக்க கூடாது என்று அய்யப்ப பக்தர்கள் கூறுகிறார்கள். மேலும் கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டாலும் சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று பெண்களும் ஆங்காங்கே திரண்டு உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே கேரள மாநில அரசு அவசரச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் கேரள மாநில அரசிடம் இருந்து இதற்கு சாதகமாக எந்தஒரு நகர்வும் தென்படவில்லை. பா.ஜனதாவும், இந்து அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலையில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை விழா அடுத்த மாதம் (நவம்பர்) 17–ந் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஆலோசனை கூட்டம் ஒன்றை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்துகிறது. இன்று நடைபெறும் இந்த கூட்டத்துக்காக தந்திரிகள், பந்தளம் அரச குடும்பத்தினர், பக்தர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், ‘சபரிமலை தொடர்பான எந்த விவகாரத்திலும் தேவசம்போர்டு பாரபட்சம் காட்டுவதில்லை.
கோவில் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கு இந்த கூட்டம் நடத்துகிறோம். இதில் அவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை கூறட்டும். அதைத்தொடர்ந்து அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் முடிவு எடுக்கலாம்’ என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஒருங்கிணைந்த முடிவு பின்னர் எடுக்கப்படும் என பந்தளம் அரச குடும்பம் மற்றும் தாழமன் தந்திரிகள் கூறியுள்ளனர்.
DINASUVADU