சபரிமலை விவகாரம்…!அனைத்து கட்சியினருடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை..!
சபரிமலை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சியினருடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நீதிபதிகள் அமர்வு, அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தனிநபர்கள் தரப்பில் 48 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு:
இதற்கிடையில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக நவம்பர்-16 ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்பட உள்ளது. இதனால் மண்டல பூஜை சீசனுக்காக நடைதிறப்பதற்கு முன் சபரிமலை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள அரசு ஏற்பாடு செய்துது.இன்று நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் தற்போது சபரிமலை விவகாரத்தில் சுமூக முடிவை எட்டும் விதமாக அனைத்து கட்சியினருடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.