சபரிமலைக்குச் சென்ற திருநங்கைகள் 4 பேரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு…!!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த திருநங்கைகள் 4 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம், மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்கச் சென்றனர். அவர்கள் எரிமேலி வழியாகப் பம்பைக்கு இன்று அதிகாலை 1.30 மணிக்குச் செல்ல முயன்றனர். அவர்களின் பெயர் அனன்யா, திருப்தி, அவந்திகா, ரஞ்சு ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலீஸ் விதாரணையில் தெரியவந்தது.
முறைப்படி விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்துள்ளதாக திருநங்கைகள் போலீஸாரிடம் தெரிவித்தனர். ஆனால் இவர்களை மறித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்று கருதிய போலீஸார், அவர்கள் மேற்கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.
இதனால் போலீஸாருடன் திருநங்கைகள் 4 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பெண் போலீஸார் சமாதானப்படுத்தி, திருநங்கைகளைப் பாதுகாப்புடன் கோட்டயம் அனுப்பி வைத்தனர்.