சத்தீஷ்கர் சட்டமன்றத்துக்கு முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.
சத்தீஸ்கரில் தற்போது ஆட்சி செய்து வரும் பாஜக அரசின் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைவதையொட்டி, அந்த மாநில சட்டப் பேரவைக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளுக்கு நவம்பர் 12-ஆம் தேதியும், மீதமுள்ள 72 இடங்களுக்கு நவம்பர் 20-ஆம் தேதியும் தேர்தல் நடத்தப்படும்; வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, கைராகர், டோங்கர்கர் (எஸ்சி), ராஜ்நந்த்கான், டோங்கர்கான், குஜ்ஜி, மோஹ்லா-மான்பூர் (எஸ்டி), அண்டாகர் (எஸ்டி), பானுபிரதாப்பூர் (எஸ்டி), கங்கேர் (எஸ்டி), கேஷ்கால் (எஸ்டி), கோண்டாகான் (எஸ்டி), நாராயண்பூர் (எஸ்டி), பஸ்தர் (எஸ்டி), ஜக்தால்பூர், சித்ரகோட் (எஸ்டி), தண்டேவாடா (எஸ்டி), பிஜாப்பூர் (எஸ்டி), கோண்டா (எஸ்டி) ஆகிய 18 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
31,79,520 வாக்காளர்கள்: இத்தேர்தலில் 16,21,839 ஆண்கள், 15,57,592 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 89 பேர் என மொத்தம் 31,79,520 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக 4,336 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட தேர்தலில் முதல்வர் ராமண் சிங் (ராஜ்நந்த்கான் தொகுதி) உட்பட 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராஜ்நந்த்கான் தொகுதியில் ரமண் சிங்கை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் கருணா சுக்லா நிறுத்தப்பட்டுள்ளார். இவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினர் ஆவார்.
மாவோய்ஸ்டுகள் அச்சுறுத்தல் காரணமாக, 18 தொகுதிகளிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்திய-திபெத் எல்லை காவல் படை உள்பட 650 கம்பெனி துணை ராணுவப் படையினர், மாநில படையினர் என மொத்தம் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மோஹ்லா-மான்பூர், அண்டாகர், பானுபிரதாப்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர் உள்பட 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், ராஜ்நந்த்கான் உள்ளிட்ட 8 தொகுதிகளில் காலை 8 மணி முதல் 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலமாக மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
dinasuvadu.com