சட்டசபை மற்றும் பாராளுமன்றத்துக்கு ஒரே நாளில் தேர்தல்
டெல்லியில் தேசிய சட்ட நாளை சட்ட ஆணையமும், நிதி ஆயோக் அமைப்பும் இணைந்து கொண்டாடியது. விழாவில் நேற்று பிரதமர் நரேந்திரமோடி நிறைவுரையாற்றினார். அதில் கூறியதாவது,
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாட்டுக்கு ஏற்பட்ட செலவு ரூ.1,100 கோடி. ஆனால் 2014-ஆம் ஆண்டு தேர்தலில் செலவிடப்பட்டதோ ரூ.4 ஆயிரம் கோடி.
ஆரம்பகாலத்தில் பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்ததால் நாடு பலனடைந்ததை நாம் பார்த்துள்ளோம். ஆனால் நமது சொந்த பலவீனம் காரணமாகவே இந்த நடைமுறை தவறாக சென்றுவிட்டது.
ஒரே நேரத்தில் பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். அரசியல்சாசன தினத்தில் நான் இந்த விவாதத்தை முன்வைக்கிறேன். இந்த விவாதத்தில் இருந்து நாம் எப்படி ஓடமுடியும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதன் மூலம் நாட்டுக்கு பல வழிகளில் பலன் கிடைக்கும். பணம், ஊழியர்கள் பணி மிச்சமாகும். மேலும், நேரமும் மிச்சமாகும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால் அரசால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாது. உலகில் மற்ற நாடுகளில் தேர்தல் தேதி நிரந்தரமானதாக உள்ளது. இந்தியாவிலும் இந்த நிலை உருவாக வேண்டும்.
அரசாங்கம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்கள். இவைகளில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த 3 துறைகளும் ஒன்றாக இணைந்து ஒருவரை ஒருவர் பலப்படுத்த பணியாற்ற வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்.
பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவை அரசாங்கத்தின் 3 ஆயுதங்கள். அரசியல்சாசனம் வகுத்துள்ள எல்லைகளை தாண்டி ஒருவரின் நடவடிக்கையில் அடுத்தவர் தலையிடக்கூடாது.
சட்டத்தை உருவாக்குவதில் பாராளுமன்றத்துக்கு சுதந்திரம் உள்ளது. முடிவுகள் எடுப்பதில் நிர்வாகத்துக்கு சுதந்திரம் உள்ளது. அரசியல்சாசனத்தை விளக்குவதில் சுப்ரீம் கோர்ட்டுக்கு சுதந்திரம் உள்ளது. ஒரு பிரச்சினை குறித்த விவாதம் எழும்போது இந்த 3 ஆயுதங்களும் ஒரு சமமான நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். அரசின் இந்த 3 ஆயுதங்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றி புதிய இந்தியாவை நோக்கி செல்ல வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி நிறைவுரையாற்றினார்.