கேரள முதல்வர், எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்..!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு கேரள அரசு முழு ஆதரவை அளித்ததுடன், சுமார் 240 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியிருந்தது. ஆனால் இந்த திட்டத்தை தற்போது மத்திய அரசு கைவிட முடிவு செய்துள்ளது. ரெயில் பெட்டி தொழிற்சாலை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கும் திட்டம் இல்லை என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் சமீபத்தில் கூறினார்.
மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று டெல்லியில் உள்ள ரெயில்வே தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பினராயி விஜயன், கேரள மக்களை மத்திய அரசு தண்டிப்பதாகவும், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி செய்வதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலைகளை பா.ஜ.க. ஆளும் அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் மத்திய அரசு தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.