கேரள மாநிலத்தில் வைரஸ் தாக்கம்! கேரள மக்கள் அச்சம்!
14 பேர்களின் உயிர்பலிக்கு காரணமான நிபா வைரஸ் நோய் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பரவலாக மக்களிடையே அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் மே மாதம் 17-ந் தேதி அனுமதிக்கப்பட்ட 26 வயது முகமது சாலியா உடல் நிலை மாற்றங்களை பரிசோதித்த மருத்துவர் குழு, மிக தீவிரமாக செயல்பட்டு 48 மணி நேரத்திற்குள் இந்த வைரஸ் நோயினை கண்டறிந்து உரிய பாதுகாப்பு சிகிச்சை முறைகளை மேற்கொண்டதால் அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றாலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்நோய் பரவாமல் தடுத்ததை மனதார பாராட்ட வேண்டும்.
இந்த மருத்துவ குழுவின் தலைவர் டாக்டர் ஜெயகிருஷ்ணன், மிக விரைவாக 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணிப்பால் பரிசோதனை மையத்திற்கு இந்த ரத்தம் மற்றும் உடல் நீர்களை அனுப்பி வைத்து இந்நோயினை உறுதிசெய்தார். நிபா வைரஸ் நோய் முதன் முதலாக செப்டம்பர் 1998-ம் ஆண்டு முதல் மே 1999-ம் ஆண்டு வரை மலேசியாவில் காம்புங் சுங்காய் நிபா என்ற இடத்திலும், சிங்கப்பூரிலும் 276 நபர்களை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்த வைரஸ் நோய்க்கு நிபா வைரஸ் நோய் என பெயரிடப்பட்டது.
இந்த நோய் வவ்வால் மற்றும் பன்றி போன்ற பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடமிருந்து அடுத்த நபர்களுக்கு சுவாச கிருமிகள் மூலம் பரவுகிறது எனவும் கண்டரிந்துள்ளனர்.
வவ்வால்கள் கடித்த பழங்களை உண்ணும் போதும், நோய் தாக்கப்பட்ட மனிதர்களின் அருகில் இருக்கும் போதும் அவர்களின் சுவாச காற்றின் மூலமாக பரவும் இந்த நோய் முதன்முதலாக இந்தியாவில் 2001-லும் பின் 2007-லும் மேற்கு வங்காள மாநிலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தியது.
இந்த நோய் பரவியது கண்டறியப்பட்டு மனிதன் மூலம் மனிதனுக்கு பரவும் ஆபத்து இந்த நோய்க்கு உள்ளது உறுதியானது. இதை தொடர்ந்து அங்கும் இங்குமாக தோன்றிய இக்கிருமி நோய் தற்போது தான் பெரிய அளவில் கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரஸ் கிருமியினால் பாதிக்கப்படும் போது காய்ச்சல், உடல் வலி, இருமல் வயிற்றுபோக்கு, வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். 40-75 சதவீதம் இந்த கிருமிகளால் தாக்கப்பட்டவர்களுக்கு மூளைகாய்ச்சல் மற்றும் சுவாச அழற்சி ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வழிமுறைகளும், தடுப்பு மருந்துகளும் இன்றும் கண்டறியப்படவில்லை.
இந்த நோய் கோழிகள் குறிப்பாக பிராய்லர் கோழிகளால் பரவாது என்பதும் குறிப்பிடத்தக்கது. வவ்வால்களை அழிப்பதும், தேவையில்லாத ஒன்று. இந்த நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள அடிப்படை சுகாதார விதிகளை மக்கள் பயன்படுத்துவது போதுமானது என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.