சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. போராட்ட அறிவிப்பு காரணமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி கேரள அரசு மனுதாக்கல் செய்யவேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் வலுத்துள்ளன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று(புதன்கிழமை) மாலை திறக்கப்படுகிறது. 22–ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்து இருக்கும். இதனால் பெண்களின் வருகை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு அவசர ஆலோசனை கூட்டத்தை திருவனந்தபுரத்தில் நேற்று நடத்தியது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி வரும் அய்யப்பன்கோவில் தலைமை தந்திரி, பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.ஆனால் இந்தக் கூட்டத்தில் எந்த சமரச தீர்வு காணப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, சபரிமலை பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில், நேற்று கூடிய ஐயப்ப பக்தர்கள், அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு , 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்தி நிறுகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
DINASUVADU