கேரளாவில் தென்மேற்கு பருவமழையால் குழந்தை உள்பட 45 பேர் பலி..!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது.
கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பலத்த மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் மிகப்பலத்த மழை பெய்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு மழை பெய்வதால் இந்த 6 மாவட்டங்களிலும் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன. ஏராளமான பயிர் நிலங்களும் சேதமடைந்தது.
கேரளாவில் மழையால் வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 45 பேர் பலியாகி உள்ளனர். இதில், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரே அதிகம். 1½ வயது குழந்தை உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இங்கு இறந்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கவும், இடிபாடுகளில் உயிர் இழந்தவர்களின் பிணங்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவிலிருந்து 50 வீரர்கள் கோழிக்கோடு சென்றனர்.
அவர்கள், நவீன கருவிகள் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். நேற்று 1½ வயது குழந்தை ரிபா மரியம், 17 வயது வாலிபர் அபினவ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.
குழந்தை ரிபா மரியத்தின் தாயார் உள்பட இன்னும் 6 பேர் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்காக மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் கேரள மந்திரிகள் ராமகிருஷ்ணன், சசீந்திரன் ஆகியோர் நேரில் சென்று மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர். எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் சென்னிதலாவும் சென்று பணிகளை பார்வையிட்டார்.
முதல்-மந்திரி பினராயி விஜயன் மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். மழை பாதித்த பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.