கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு..!
கடந்த 11-ந் தேதி மாலை, டெல்லி கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சென்றார். அவருடன் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் 2 மந்திரிகளும் சென்றனர். டெல்லியில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ‘வேலைநிறுத்தத்தை’ முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 3 கோரிக்கைகளை கவர்னரிடம் வலியுறுத்தினர். அவற்றை கவர்னர் ஏற்கவில்லை என்று கூறி, கவர்னர் அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
அவருக்கு சில முதல்-மந்திரிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதே சமயத்தில், பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இதுதொடர்பான வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக சாடியது. கவர்னர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த யார் அனுமதி கொடுத்தது? என்று கேட்டது. அடுத்தகட்ட விசாரணையை 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டம் நேற்று 9-வது நாளை எட்டியது. ஆனால், அவர் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
டெல்லியில், மந்திரிகள் இன்று (நேற்று) நடத்திய பல்வேறு கூட்டங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதனால், அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் அலுவலகத்தை விட்டு வெளியேறுவார். நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. கவர்னரை சந்திப்பதற்காகவே அங்கு தங்கி இருந்தோம் என்று துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா, போராட்டம் வாபஸ் பற்றி பதில் அளித்தார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் கெஜ்ரிவால் ரத்து செய்துள்ளார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், கவர்னர் இல்லத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த சமயத்தில், நடைப்பயிற்சியில் ஈடுபடாததாலும், உணவையும் சரியான நேரத்தில் அருந்தாததாலும் இரத்தத்தில் சர்க்கரை அளவு லேசாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.