டெல்லி ஆளுநர் மாளிகையில் 5ஆவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சரையும், அமைச்சர்களையும் குடும்பத்தினர் பார்க்க அனுமதி மறுக்கப்படுவதாக கெஜ்ரிவாலின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், தொழிலாளர்துறை அமைச்சர் கோபால் ராய் ஆகியோர், டெல்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் காத்திருப்போர் அறையில் கடந்த 11ஆம் தேதி முதல் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், ஆளுநர் மாளிகையின் காத்திருப்போர் அறையில் உணவு அருந்தி, அங்கேயே சோஃபாவில் தூங்கி, அங்குள்ள கழிவறையை பயன்படுத்திக்கொண்டு, 5ஆவது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆளுநர் மாளிகையில் இருந்து அவர்களுக்கு தேநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.கெஜ்ரிவாலுக்கு வீட்டிலிருந்து உணவுகளும், இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளும் செல்கின்றன.
தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத மற்றும் பணிக்குத் திரும்பாத ஐஏஎஸ் அதிகாரிகள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று கெஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும் கூறியுள்ளனர். அதேசமயம், பெண் அதிகாரிகள் உள்ளிட்டு தங்களது பாதுகாப்பு, கண்ணியம், மரியாதை தொடர்பாக முதலமைச்சரோ அமைச்சர்களோ உத்தரவாதம் தரத் தவறியதால், அவர்களுடனான அதிகாரப்பூர்வ கூட்டங்களை தவிர்ப்பதாக ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் பணியில் இருப்பது மற்றும் திட்டப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ பதிவுகளையும் சில அதிகாரிகள் ட்விட்டர் பக்கங்களில் பதிவேற்றியுள்ளனர்.
இருப்பினும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான இந்த மோதலால் கடந்த சில நாட்களாக டெல்லி தலைமைச் செயலகத்தில் பணிகள் முடங்கியுள்ளன. இதை முடிவுக்கு கொண்டுவருமாறு கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பிரதமர் அலுவலகத்தின் முன் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சியினர் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே ஆளுநர் மாளிகையில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதலமைச்சரையும், அமைச்சர்களையும் குடும்பத்தினர் பார்க்க அனுமதி மறுக்கப்படுவதாக கெஜ்ரிவாலின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, சிறைக்கைதிகள் கூட தங்களது குடும்பத்தினரை சந்திக்க அனுமதி வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.