குஜராத் வன்முறை: "மோடி அரசு வேடிக்கை பார்த்தது" ராணுவத் தளபதி பகிரங்க குற்றச்சாட்டு..!
குஜராத் மாநிலத்தில், 2002-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்-பரிவாரங்கள் நடத்திய மதவெறியாட்டத்தை, அப்போதைய மோடி தலைமையிலான மாநில அரசு வேடிக்கை பார்த்ததாக இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற துணைத்தளபதி ஜெனரல் சமீர் உதீன் ஷா கூறியுள்ளார்.
அரசு மட்டும் உதவியிருந்தால் குறைந்தபட்சம் 300 பேர்களின் உயிர்களையாவது காப்பாற்றி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.குஜராத் வன்முறையைத் தடுக்கும் பணியில் 2002-இல் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. இந்த படைக்கு தலைமை வகித்தவர்தான் ஜெனரல் சமீர் உதீன் ஷா. பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர், ‘தி சர்க்காரி முசல்மான்’ என்ற சுயசரிதை ஒன்றை எழுதியுள்ளார். இந்த சுயசரிதையிலேயே, குஜராத் வன்முறையின்போது நடந்த சம்பவங்களை ஜெனரல் ஷா விவரித்துள்ளார். மேலும், என்டிடிவி-க்கு நேர்காணல் ஒன்றையும் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:2002 மார்ச் 1-ஆம் தேதி அன்று வன்முறை தொடங்கிய மறுநாளே அகமதாபாத்தின் விமான நிலையத்தில் 3 ஆயிரம் ராணுவ வீரர்களைக் கொண்ட படையுடன் இறங்கினோம். அப்போது குஜராத், வன்முறையால் பற்றி எரிந்து கொண்டிருந்தது.
நான் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே, போக்குவரத்து வசதிகள் குறித்துத்தான் கேட்டேன். அதற்கு மாநில அரசு அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை. அரசு நிர்வாகமே மெத்தனமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் உடனடியாக, அப்போதைய முதல்வர் மோடியின் இல்லத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினேன். மோடியின் இல்லத்தில் அவருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார். நான் மோடியிடம், எங்களக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகள் பற்றியும் தெரிவித்து விட்டு வந்தேன்.
ஆனால், அடுத்த நாள் நான் அங்கு சென்றபோது, நாங்கள் வன்முறைப் பகுதிகளுக்குச் செல்வதற்கு எந்தப் போக்குவரத்தும் இல்லை. உடனே குஜராத் மாநில அரசின் தலைமை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தோம். அப்போதும், அவர்கள் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்யவில்லை. நாங்கள் ஒருநாள் முழுவதும் விமான நிலையத்தில் ராணுவத் துருப்புகளுடன் காத்திருந்தோம்.அங்கிருந்தவாறே எங்கள் கண் எதிரே தொலைவில் பல இடங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தோம். துப்பாக்கியால் சுடப்படும் சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. இவற்றைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் நின்று கொண்டிருந்தோம். மறுநாள்தான் எங்களது துருப்புகள் கலவரப் பகுதிகளுக்குச் செல்வதற்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அப்போதும் கூட, வன்முறை நடந்த இடங்களில் மாநில காவல்துறையினர் செயல்பாடுகள் எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தன. சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளை கலவரக்காரர்கள் சூழ்ந்து கொண்டிருந்த நிலையில், அவர்களை அங்கிருந்த விரட்டியடிக்க காவல்துறை எந்த முயற்சியும் செய்யவில்லை. இது மாநில அரசே மக்களைப் பிரித்தாள்வது போன்றுதான் எனக்குத் தோன்றியது.ஒருநாள் முன்னதாக, நாங்கள் வந்து இறங்கியவுடன் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் 300 உயிர்களையாவது காப்பாற்றியிருக்க முடியும். இது குஜராத் அரசு நிர்வாகத்தின் தோல்வியே ஆகும்.இவ்வாறு ஜெனரல் சமீர் உதீன் ஷா தெரிவித்துள்ளார்.
DINASUVADU