‘‘காஷ்மீர் மக்களின் குரலாக இருந்தவர் ஷுஜாத் புகாரி”: இறுதி ஊர்வலத்தில் நண்பர்கள் உருக்கம்..!
சுட்டுக் கொல்லப்பட்ட ஷுஜாத் புகாரி காஷ்மீர் மக்களின் குரலாக இருந்தவர் என்று அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட நண்பர்கள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிகை ஆசிரியரும், தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டின் முன்னாள் செய்தியாளருமான ஷுஜாத் புகாரியும் அவரது பாதுகாப்பு அதிகாரியும் மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ரைஸிங் காஷ்மீர்’ பத்திரிகை அலுவலகம் ஸ்ரீநகரின் பிரஸ் என்கிளேவ் பகுதியில் உள்ளது. இந்த பத்திரிகையின் ஆசிரியரான ஷுஜாத் புகாரி, லால் சவுக் பகுதியில் மாலையில் நடைபெற இருந்த இப்தார் விருந்தில் பங்கேற்பதற்காக தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்படத் தயாரானார்.
அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினார்கள். இதில் புகாரியும் அவரது தனி பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒரு போலீஸ்காரரும் பொதுமக்களில் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட ஷுஜாத் புகாரியின் இறுதி ஊர்வலம் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு ஷுஜாத் புகாரிக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
ஷுஜாத் புகாரியின் நீண்ட நாள் நண்பரும் பத்திரிகையாளருமான முகமத் சையத் கூறும்போது, ‘‘அவர் ஒரு நல்ல மனிதர். அவர் இறந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட அவரது பத்திரிக்கையில் பத்தாம் ஆண்டு விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுத்தார். நானும் அதில் கலந்து கொண்டேன். ஆனால் அதுதான் அவருடனான கடைசி சந்திப்பு என்று எனக்கு தெரியாது” என்றார்.
தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குநர் முகமத் ரபாக் கூறும்போது, ”அவர் எனது இளைய சகோதரர் போன்றவர். அவர் சிறந்த எழுத்தாளர். காஷ்மீர் மக்களின் குரலாக இருந்தார். அவரது இறப்பு அவரது குடும்பத்துக்கு பெரும் இழப்பு” என்று கூறினார்.
இந்த நிலையில் ஷுஜாத் புகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் புகைப்படத்தை காஷ்மீர் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.