காஷ்மீர் பாதுகாப்பு படை துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் பலி..!
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட நவ்போரா லஸ்ஸிபோரா பகுதியில் உள்ள ஒரு பயங்கரவாதியின் வீட்டை இன்று பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தரைமட்டமாக்க முயன்றதாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட அப்பகுதி மக்கள் பாதுகாப்பு படையினரை சூழ்ந்துகொண்டு தடுத்தனர். அவர்களை விலக்க பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். அப்போது கூட்டத்தில் சிலர் கற்களை வீசி பாதுகாப்பு படையினரை தாக்கினர்.
நிலைமை கட்டுமீறிப் போனதால் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விகாஸ் அகமது ரத்தர் என்னும் வாலிபர் உயிரிழந்தார். ருக்யா ஜன்வரி என்னும் பெண் உள்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
மேலும் அங்கு அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.