காஷ்மீர் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மத்திய அரசு கவலை: ராஜ்நாத் சிங் தகவல்..!

Default Image

காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக நேற்று ஸ்ரீநகர் சென்றார். பின்னர் அவர் ஷெர்-இ-காஷ்மீர் பகுதியில் உள்ள உள்ளரங்க விளையாட்டு மைதானம் ஒன்றில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

எல்லா இடங்களிலும் உள்ள குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள்தான். குழந்தைகள் தவறு செய்பவர்கள். அப்படித்தான் காஷ்மீரில் சில இளைஞர்கள் தவறான வழிநடத்துதல் காரணமாக கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.

காஷ்மீர் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மத்திய அரசு கவலைப்படுகிறது. அதனால்தான் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட குழந்தைகள் மீதான வழக்குகளை திரும்ப பெற நாங்கள் முடிவு செய்தோம்.

காஷ்மீர் இளைஞர்கள் வளர்ச்சியின் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அழிவின் பாதையில் அவர்கள் ஒருபோதும் செல்லக்கூடாது. காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் அளப்பெரிய அன்பு நிறைந்துள்ளது.

இந்த மாநில இளைஞர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பது எங்கள் கடமை. கல்வியின் சக்தியாலும், விளையாட்டின் அதிசயத்தாலும் அதை உருவாக்க முடியும். மாநில அரசின் உதவியுடன் காஷ்மீரின் முகத்தையும், விதியையும் நாங்கள் மாற்றுவோம்.

காஷ்மீரில் விளையாட்டுத்துறை கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க நிதி, ஒரு பிரச்சினையாக இருக்காது. மன்சார் மற்றும் பகல்காமில் நீர் விளையாட்டுகளை ஊக்குவிக்க நிதியுதவி செய்யப்படும். அதைப்போல விளையாட்டுத்துறையின் கட்டமைப்புக்கும் போதுமான நிதி வழங்கப்படும்.

காஷ்மீரில் இருந்து பர்வேஸ் ரசூல், மெராஜுத்தீன், ரஜிந்தர் சிங், மன்சூர் தார், தஜ்ஜமுல் இஸ்லாம் போன்ற சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாகி இருக்கின்றனர். அவர்களைப்போல ஏராளமான திறமையாளர்களை இந்த மாநிலம் கொண்டுள்ளது. இங்கு நிலைமை சீரானால் ஏராளமான விளையாட்டு வீரர்கள் மேலும் உருவாக முடியும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்