காஷ்மீரில் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்..!
ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றும் அவுரங்சீப் எனும் ராணுவ வீரர், பயங்கரவாதிகளால் இன்று கடத்தி செல்லப்பட்டதாக ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற இவரை துப்பாக்கிமுனையில் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.
ராணுவ வீரர் கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவன், ராணுவ என்கவுண்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த என்கவுன்டரை நடத்தியவர்களில் கடத்தப்பட்ட்ட அவுரங்கசீப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.