காஷ்மீரில் சண்டை நிறுத்தம் முடிந்தது : ராஜ்நாத் சிங்..!
ஜம்மு காஷ்மீரில் ரமலான் மாதத்தையொட்டி பாதுகாப்பு படைகள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இருப்பினும் பொதுமக்களை இலக்காக வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பயங்கரவாதிகள் தரப்பில் துப்பாக்கி சூடு மற்றும் கையெறி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
ரமலான் மாதத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சண்டை நிறுத்தம் தொடருமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் முடிந்தது, பாதுகாப்பு படைகள் நடவடிக்கைகளை தொடங்கும் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தில் பாதுகாப்பு படைகள் ஆப்ரேஷன்களை மேற்கொள்ளக்கூடாது என மே 17-ம் தேதி அரசு முடிவு எடுத்தது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை விரும்பும் மக்களின் நலனுக்காக இம்முடிவு எடுக்கப்பட்டது, அவர்களுக்கு ரமலான் பண்டிகையை கொண்டாட அமைதியான சூழ்நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்போது பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுப்பதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் வன்முறையற்ற சூழலை உருவாக்குவதற்கான முயற்சியை அரசு தொடரும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.