காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை ராணுவ தளபதி வரவேற்றார்.!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களின் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எந்த தடையும் இருக்காது என இந்திய ராணுவ தலைமை தளபதி கூறியிருக்கிறார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியை பாரதிய ஜனதா கட்சி செவ்வாய்க்கிழமை அன்று திடீரென முறித்துக்கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 8ஆவது முறையாக ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. 6 மாதங்கள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆளுநர் ஆட்சி வருகிற டிசம்பர் 20ஆம் தேதியோடு முடிவடைகிறது.
காஷ்மீரில் 2008ஆம் ஆண்டிலிருந்து ஆளுநராக இருந்து வரும் என்.என்.வோராவின் பதவிக்காலத்தில், நான்காவது முறையாக ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, புதன்கிழமை காலை 11.30 மணியளவில், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளோடு, ஆளுநர் என்.என்.வோரா ஆலோசனை மேற்கொண்டார். என்.என்.வோராவின் பதவிக்காலம், வருகிற 25ஆம் தேதியோடு முடிவடைவதால், அவரது பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருக்கடி நிலைகளை காரணமாக காட்டி, இதுவரை, 4 முறை, காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோராவில் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதை, இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் வரவேற்றிருக்கிறார். காஷ்மீர் மற்றும் நாட்டின் நலன் கருதி எடுக்கப்படும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இனி வரும் நாட்களில் எவ்வித அரசியல் ரீதியிலான தடங்கலும் இருக்காது என, அவர் கூறியிருக்கிறார்.