காவிரி மேலாண்மை வாரியம் தாமதம் இன்றி அமைக்க வேண்டும்…!அதிரடியில் கிரண்பேடி…!
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தாமதம் இன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதேநேரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தாமதம் இன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
தாமதம் இன்றி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவினை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் காரைக்கால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி தீர்ப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்குத் தொடர மாநில அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக தாமதம் இன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.