காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் பட்டியல்! கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அமைப்பின் பெயர் காவிரி மேலாண்மை ஆணையம் என மத்திய அரசு தெரிவித்து, அதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பின்னர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்கான அரசாணையையும் சமீபத்தில் வெளியிட்டது.
இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான மாநில உறுப்பினர்களை மாநில அரசு தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக தமிழக அரசும் உறுப்பினர் பட்டியலை தயார் செய்து நீர்வளத்துறைக்கு அனுப்பியது. மேலும், இதர மாநிலங்களான கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் தங்களது உறுப்பினர் பட்டியலை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு உறுப்பினர் பட்டியலை அனுப்பவில்லை.
சமீபத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவர் மசூத் உசேன் நியமிக்கப்பட்டார்.
மேலும், வரும் 12-ம் தேதிக்குள் கர்நாடக மாநிலத்துக்கான காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்து, அந்த பட்டியலை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால் கர்நாடக அரசு விரைவில் உறுப்பினர் பட்டியலை தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.