காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரக்கூடாது!பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டுகோள்
பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி,காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவை அமைப்பது, செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து தற்போது எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைத்த மத்திய அரசு, கடந்த 1-ஆம் தேதி இதுகுறித்த அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. தமிழகம், கேரளா, புதுச்சேரி தங்கள் உறுப்பினர்களை பரிந்துரைத்த நிலையில், கர்நாடகா இன்னும் உறுப்பினர் பெயரைப் பரிந்துரைக்கவில்லை.
இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திய பின்னரே காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இதையடுத்து, பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அணைகளை இயக்குவதும், விவசாயிகள் என்னென்ன பயிர்களை சாகுபடி செய்வது என தீர்மானிப்பது ஆகியவற்றை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவின் அதிகாரத்துக்குள் கொண்டு வருவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்தப் பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பது குறித்தும், செயல்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்தும் தற்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் குமாரசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.