காவிரி நீர் இன்று மாலையில் மேட்டூர் அணையை வந்தடையும்..!
கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து இரண்டாவது நாளாக வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால், காவிரி நீர் இன்று மாலையில் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, கர்நாடகாவின் குடகு, சிக்மகளூரு, தக்சின கன்னடா, ஷிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர் மழை காரணமாக, கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி, காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
84 அடி உயரம் கொண்ட கபினி அணையில் தற்போது, 79 புள்ளி 4 அடி உயரத்துக்கு நீர் மட்டம் உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 36 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் வந்த நிலையில், இன்று 33 ஆயிரத்து 153 கன அடியாக குறைந்துள்ளது.
இருப்பினும், நேற்று காலையில் வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி அளவில் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீர், இன்று இரண்டாவது நாளாக அதே அளவு திறக்கப்படுகிறது. கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், இன்று மாலை அல்லது இரவுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.