காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை ! அனைவரும் மகிழ்ச்சி..!

Default Image

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்துவருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினமும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது.

குடகு மாவட்டத்தில் 2 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டிவருவதால், நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தலைக்காவிரி பகுதியில் பெய்த பலத்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரத்தில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முக்கிய அணையான கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துவருகிறது. ஹாரங்கி அணைக்கும் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 2,788.18 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 295 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மடிகேரியில் 108.80 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள்.

கனமழையால் குமாரதாரா, நேத்ராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் 2 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

கர்நாடக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்