காலியான எடியூரப்பா முதல்வர் பதவி!கருத்துக்களை தெறிக்க விட்ட தலைவர்கள்!
பல்வேறு கட்சித் தலைவர்களும் கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
தாம் ஆட்சியை இழந்தால் எதையும் இழந்துவிடப் போவதில்லை என்றும், போராட்டக் களத்தின் பின்னணியில் இருந்தே தாம் வந்ததாகக் கூறி முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த பாஜகவின் எடியூரப்பா தமது பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்:
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பணம், பதவி என பாஜகவின் ஆசைவார்த்தை மற்றும் மத்திய அரசின் அழுத்தம் தரும் போக்கு உள்ளிட்டவற்றில் இருந்து தங்கள் எம்எல்ஏக்கள் தாக்குப் பிடித்து அரசியலமைப்புச் சட்டத்தின் சக்தியை வெற்றி பெறச் செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி:
சட்டப்பேரவை முடிந்து தேசியகீதம் பாடும் முன்பே பாஜக எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளியேறியதே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் காட்டுவதாகவும், இந்த முடிவு பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் ஒரு பாடம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டார். பாஜகவின் அனைத்து விதமான எம்எல்ஏ வேட்டையில் இருந்தும் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஜெயித்துக் காட்டியதற்காக நன்றி கூறுவதாக ராகுல் தெரிவித்தார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா:
எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநரின் முடிவு இந்திய ஜனநாயகத்தில் கரும்புள்ளி என்று கூறியுள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா வரலாற்றில் இது முக்கியமான நாள் என தெரிவித்துள்ளார்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்:
மதச்சார்பற்ற அணிகள் கர்நாடகாவில் ஒருங்கிணைந்து பொறுப்பேற்பது மகிழ்ச்சி என்றும், அதுவே கர்நாடக மக்களின் விருப்பம் என்றும் கூறியுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த முடிவை திமுக மனப்பூர்மாக வரவேற்பதாக பேட்டி அளித்துள்ளார். குமாரசாமிக்கு வாழ்த்துக்களையும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்:
கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும் என்றும், வாழிய பாரத மணித்திருநாடு என்றும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தமது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்:
ஜனநாயகத்தைக் கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி மிக மோசமான முறையில் தோல்வியடைந்துள்ளதாகவும், அக்கட்சியின் பதவி மோகம் வெளிச்சத்துக்கு வந்ததோடு, இந்திய நீதித்துறை ஜனநாயகத்தைக் காப்பாற்றிவிட்டதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு:
ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி:
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஜனநாயகம் வென்றுவிட்டதாகவும் கர்நாடகாவுக்கும், தேவேகவுடா, குமாரசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி:
இந்த முடிவு பாஜகவுக்கு மிகப்பெரிய அடி என்றும், 2019-க்கு அடித்தளமிட்ட திட்டங்கள் தோல்வியடைந்ததால் அவர்கள் புதிய யுக்திகளை வகுக்க வேண்டியுள்ளதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கருத்து கூறியுள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் ம.ஜ.த. கூட்டணி, சித்தாந்தங்கள் சார்ந்த கூட்டணி அல்ல போலியான, சந்தர்ப்ப வாத கூட்டணி என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தங்கள் கட்சியின் தோல்வியை வெற்றியாகக் கொண்டாடி வருவதாக அவர் கூறினார்.
தேவேகவுடாவை தரக்குறைவாக விமர்சித்த ராகுலின் காங்கிரஸ் கட்சி இன்று அவரது ம.த.ஜ.வுடன் கைகோர்த்துள்ளதாகவும் ஜவ்டேகர் விமர்சித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.