காதலிக்க மறுத்த பெண் ஊழியரை மிரட்டிய வங்கி அதிகாரி கைது..!
மும்பையை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வரும் அபிஜித் (32) என்பவர், அந்த பெண் ஊழியரிடம் தன்னை காதலிக்கும்படி கூறியுள்ளார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்தார்.
இந்தநிலையில், அந்த பெண்ணின் போனுக்கு மர்மஆசாமி ஒருவர் அடிக்கடி போன் செய்து பேசினார். அவர் ரூ.15 லட்சம் தரவேண்டும். இல்லை யெனில் உன் மீதும், உனது தாயின் முகத்திலும் திராவகத்தை வீசி விடுவேன் என மிரட்டி உள்ளார்.
மேலும் அப்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலை தளத்தில் பதிவேற்றி விடுவதாகவும் கூறினார். இதனால் மனஉளைச்சல் அடைந்த பெண் சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், தன்னை காதலிக்க மறுத்த கோபத்தில் பெண் ஊழியரை பழிவாங்கு வதற்காக வங்கி அதிகாரி அபிஜித் தான் அவரை போனில் மிரட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அபிஜித்தை கைது செய்தனர்.