காங்.மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை..!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சைபுதின் சோஸ். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முதல் ஐந்து வருட ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இவர் பதவி வகித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். சைபுதின் சோஸ், புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த வாரம் இந்த புத்தகம் வெளியாக உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளிப்படுத்தி சைபுதின் சோஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சைபுதின் சோஸ் கூறும் போது, “ பாகிஸ்தானுடன் காஷ்மீரை இணைக்க வேண்டும் என்று காஷ்மீரிகள் விரும்பவில்லை. காஷ்மீர் மக்களின் முதல் விருப்பம் சுதந்திரமேயாகும் என்று பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷரப் தெரிவித்து இருந்தார்.
முஷரப்பின் இந்த கூற்று அப்போதும், இப்போதும் சரியான ஒன்றாகவே உள்ளது. நானும் இதே கருத்தை வழிமொழிகிறேன்.ஆனால், காஷ்மீர் சுதந்திரம் என்பது சாத்தியமில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.