காங்கிரஸ் சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்!
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவையைத் தவறாக வழிநடத்தியதற்காக மீது உரிமை மீறல் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வர உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் ஐஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த இரு நாட்களுக்கு முன் மாநிலங்களவையில் அறிவித்தார். இதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 4 ஆண்டுகளாக உயிரோடு இருக்கிறார்கள் என்றுகூறி அவையைத் தவறாக வழிநடத்தியதற்காக சுஷ்மா ஸ்வராஜ் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் அம்பிகா சோனி, பிரதாப் பஜ்வா, ஷாம்செர் சிங் துலோ ஆகியோர் மத்திய அமைச்சர் சுஷ்மாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வர உள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. அம்பிகா சோனி நிருபர்களிடம் டெல்லியில் இன்று கூறியதாவது, மாநிலங்களவையைத் தவறாக வழிநடத்தியதற்காக சுஷ்மா ஸ்வராஜ் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர இருக்கிறோம். கடந்த 4 ஆண்டுகள் இராக்கில் 39 இந்தியர்களும் உயிரோடு இருப்பதாகக் கூறிவிட்டு இப்போது ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக சுஷ்மா கூறுகிறார். 39 இந்தியர்கள் உயிரோடு சுஷ்மா விளையாடி விட்டார்.
39 இந்தியர்கள் இறந்துபோன செய்தியை சொல்லவேண்டியது யாருடைய கடமை, கடந்த 4 ஆண்டுகளாக இந்த விஷயத்தை மூடிமறைத்திருந்தது யார். இந்த விவகாரத்தில் உண்மை நிலவரத்தை விரைவாகத் தெரிவித்திருக்க வேண்டிய பொறுப்பு சுஷ்மாவுக்கு இருக்கிறது.
நாங்கள் பலமுறை சுஷ்மா ஸ்வராஜிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசி இருக்கிறோம். ஆனால், அவரோ எந்தவிதமான தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். 39 இந்தியர்களும் உயிரோடு இருப்பதாகவே தெரிவித்து வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக 39 இந்தியர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தவறாக வழிநடத்தி இருக்கிறது. கடந்த ஆண்டே இந்த 39 பேரும் இறந்துவிட்டார்கள் என்று அறிந்திருந்தும் அதைத் தெரிவிக்காமல், முக்கியத்துவம் தெரியாமல் அரசு இருந்துள்ளது என்று அம்பிகா சோனி தெரிவித்தார்.
இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி. பஜ்வா கூறுகையில், ”கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரிடமும் சுஷ்மாவின் அமைச்சகம் சார்பில் யாரேனும் தொடர்பு கொண்டார்களா, அல்லது வீடியோ ஆதாரம் இருக்கிறதா, அல்லது மொபைல்போனில் பதிவு செய்து இருக்கிறார்களா என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.