கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரை கொன்றது ஒரே துப்பாக்கி ! பரபரப்பு தகவல்..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றி உள்ளார். இவர் வாரப்பத்திரிகை ஒன்றையும் நடத்தி வந்தார். துணிச்சல் மிக்க பத்திரிகையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.
கடந்த 5-9-2017 அன்று கவுரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் தனது இல்லத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த குழுவினர் நடத்திவரும் விசாரணை தொடர்பான மாநில அரசின் தடயவியல் ஆய்வு அறிக்கையில் கவுரி லங்கேஷும், 30-8-2015 அன்று படுகொலை செய்யப்பட்ட மதவாதத்துக்கு எதிரான பிரபல எழுத்தாளர் கல்புர்கியும் ஒரே ரகத்தை சேர்ந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
இருவருமே 7.65 மில்லிமீட்டர் காலிபர் தோட்டாக்களை பயன்படுத்தி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.