கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமார் தகவல் …!புதியதாக 5 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்….!
கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமார் , கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக புதியதாக 5 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டபேரவைக்கு வருகிற மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் ஆணையம் பல்வேறு முன் ஏற்பாடுகளை செய்துவருகிறது. இதற்காக குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 3 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கர்நாடகாவுக்கு கொண்டுவரப்பட்டன. இதனை ஆராய்ந்ததில் நிறைய இயந்திரங்கள் பழுதடைந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமார் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் மொத்தமாக 58 ஆயிரத்து 546 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இதில் 4 கோடியே 96 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக புதியதாக 5 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் ரசீது வழங்கும் வசதியும் உள்ளது.
கர்நாடகாவில் பயன்படுத்தப்போகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மொத்தமாக 89 ஆயிரத்து 206 வாக்குப்பதிவு அலகுகளும், 76 ஆயிரத்து 192 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு மையங்களும் உள்ளன. இவை முறையாக சரி பார்க்கப்பட்டு தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் மாவட்ட தலைநகர்களில் இந்த இயந்திரங்களைக் கொண்டு ஒத்திகை பார்க்கப்படும்” என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.