கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையத்திற்கு பிரதிநிதியை பரிந்துரைக்க மத்திய அரசு 2 நாட்கள் கெடு!
மத்திய அரசு காவிரி ஆணையத்திற்கு பிரதிநிதியை பரிந்துரைக்க கர்நாடக அரசுக்கு 2 நாட்கள் கெடு விதித்துள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானதையடுத்து, காவிரி ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவிற்கான பிரதிநிதிகளின் பட்டியலை அறிவிக்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி அரசுகளின் சார்பில் பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கர்நாடகா மட்டும் இதுவரை பிரதிநிதிகள் பெயர்களை அறிவிக்கவில்லை. இதையடுத்து, குறுவை சாகுபடிக்கு உடனடியாக நீர் கிடைக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடக அரசு இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது பிரதிநிதிகளை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 12ம் தேதிக்குள் கர்நாடக அரசு தனது பிரதிநிதிகளை நியமித்தால் காவிரி ஆணையத்தின் முதல்கூட்டத்தை அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டுவது குறித்த தேதி முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.