கர்நாடகாவில் ‘காலா’ வெளியிட ரஜினிக்கு நிபந்தனை!காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி கூற வேண்டும்!
கர்நாடகாவில் ‘காலா’ திரையிட கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை விதித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார்.
காவிரி பிரச்சனையின் போது, தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், அவர் நடிப்பில் உருவாகும் படங்களை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து காலா படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை காலா படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் ‘காலா’ திரையிட கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை விதித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், ரஜினிக்கு நிபந்தனை விடுத்துள்ளார்.
முன்னதாக கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.