கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு தொடரும் சோகம்! எம்எல்ஏ விபத்தில் மரணம்!
கடும் பரபரப்புக்கிடையே கர்நாடகாவில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைபற்றிய நிலையில், அந்த கட்சி எம்எல்ஏ ஒருவர் இன்று சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 224 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் 222 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. 2 இடங்கள் காலியாக உள்ளன. தனி்ப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக சார்பில் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.
காங்கிரஸூக்கு 78 உறுப்பினர்கள், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 36 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் உறுப்பினர் ஒருவரும், 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். பாஜக சார்பில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் வெளியேறினார்.
நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதவுடன் முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவு தற்போதைய குமாரசாமிக்கு உள்ளது. அதுமட்டுமின்றி எப்போது தங்கள் தரப்பு எம்எல்ஏக்கள் இழுக்க பாஜக தொடர்ந்து முயன்று வருவதாக ஆளும் தரப்பு புகார் கூறி வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் இன்று உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் ஜாம்கண்டி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சித்து நியாம் கவுடா. இவர் தற்போதைய எம்எல்ஏ மட்டுமின்றி முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார்.
டெல்லி சென்ற அவர், கோவாவில் இருந்து கர்நாடகாவின் பாகல்கோட் நகருக்கு காரில் வந்துகொண்டிருந்தார். துளசிகேரி அருகே வந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் எம்.எல்.ஏ. சித்து உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக அரசியல் களம் பரபரப்பாக உள்ள சூழலில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தது, ஆளும் கூட்டணியை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.