கர்நாடகாவில் அதிருப்தி கோஷ்டியை இழுக்க எடியூரப்பா மீண்டும் முயற்சி
கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி மந்திரி சபையில் மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி கோஷ்டி உருவாகி உள்ளது. அவர்கள் முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரி எம்.பி.பட்டீல் தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள்.
அதிருப்தியாளர்களை சமாதப்படுத்தும் ராகுல் காந்தியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அதிருப்தியாளர்கள் ஏமாற்றத்துடன் பெங்களூர் திரும்பினார்கள்.
இதற்கிடையே காங்கிரசில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.
இதுகுறித்து கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும் எதிர்கட்சி தலைவருமான எடியூரப்பா கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-
காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சிகள் கூட்டணி வைத்திருப்பது பல்வேறு எம்.எல்.ஏ.க்களுக்கு விருப்பம் இல்லாமல் உள்ளது. 2 கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர்.
கூட்டணி ஆட்சி பிடிக்காமலும் மந்திரி பதவி கிடைக்காமலும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவில் சேர தயாராக உள்ளனர். பா.ஜனதா கட்சியில் சேருவதற்கு காங்கிரஸ், ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்கள் ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
எடியூரப்பா வெளிப்படையாக இவ்வாறு கூறியிருப்பது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே எடியூரப்பா முதல்-மந்திரியகவே பதவி ஏற்றபோது 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்த நிலையில் மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற முயற்சி மேற்கொண்டார்.
ஆனால் எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் பாதுகாத்து வந்ததால் ஆதரவை பெற முடியவில்லை. தற்போது எம்.எல்.ஏ.க்கள் தாராளமாக நடமாடுவதால் அவர்களுக்கு எடியூரப்பா வலை விரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே கர்நாடக அரசியல் தற்போது நடக்கும் சம்பவங்களால் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் அதிருப்தியில் இருக்கிறார். அவரிடம் அதிருப்தியில் இருக்கும் மூத்த தலைவர்களை சமாதானப்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
முதலில் இதை ஏற்க மறுத்த அவர் பின்னர் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.