கர்நாடகத்தில் அமைச்சர் பதவி சிக்கல்! காங். அதிருப்தியாளர்களுக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை..!

Default Image

கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது. இதையடுத்து ஜே.டி.எஸ், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த 25 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

புதிய மந்திரிசபை பதவி ஏற்றது முதல் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. முதலில் இலாக்காக்கள் ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது. முக்கிய இலாகாக்கள் வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

இறுதியில் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தியது. குமாரசாமியே 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக நீடிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. அதற்கு பலனாக பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் ஜே.டி.எஸ். கட்சி கூட்டணி சேர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இலாகா ஒதுக்கீடு பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில் காங்கிரசிலும் ஜே.டி.எஸ். கட்சியிலும் மந்திரி பதவி கிடைக்காத தலைவர்கள் பலர் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காததால் எம்.பி.பட்டீல், சதீஸ்ஜார்கிகோளி, எச்.கே. பட்டீல், எம்.டி.பி. நாகராஜ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

எம்.பி. பட்டீல் தனக்கு துணை முதல்-மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி உயர்த்தினார். தனக்கு ஆதரவாக 20 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும் எம்.பி. பட்டீல் தெரிவித்தார்.

இதையடுத்து எம்.பி. பட்டீலை துணை முதல்- மந்திரி பரமேஸ்வர், கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரி கிருஷ்ணபைரே கவுடா ஆகியோர் சந்தித்து சமாதானப்படுத்த முயன்றார்கள்.

அதேபோல் முதல்-மந்திரி குமாரசாமியும், எம்.பி. பட்டீலை சந்தித்து பேசினார். அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அவர் தனக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுத்தே தீரவேண்டும் என்று அடம்பிடித்தார்.

இதையடுத்து மேலிட அழைப்பின் பேரில் எம்.பி. பட்டீல் மற்றும் அதிருப்தியாளர்கள் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.

எம்.பி. பட்டீலை சமாதானப்படுத்திய ராகுல் காந்தி, அடுத்தக்கட்டமாக மந்திரிசபை விரிவாக்கத்தின் போது துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றார்.

இதை ஏற்க மறுத்த எம்.பி.பட்டீல் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தனக்கு துணை முதல்-மந்திரி பதவி கட்டாயம் வழங்க வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் திட்டவட்டமாக தெரிவித்ததுடன் லிங்காயத் சமூகத்தை புறக்கணித்தால் நாடாளுமன்ற தேர்தலில் வட கர்நாடகத்தில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் தெரிவித்தார். இதை ஏற்க ராகுல்காந்தி மறுத்துவிட்டார். இதனால் ராகுல்காந்தியுடன் எம்.பி.பட்டீல் நடத்திய ஆலோசனை தோல்வியில் முடிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல்காந்தியை சந்தித்து விட்டு வெளியே வந்த எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்றோ, துணை முதல்-மந்திரி பதவி வேண்டும் என்றோ மாநில தலைவர் பதவி வேண்டும் என்றோ ராகுல்காந்தியிடம் எந்தவிதமான கோரிக்கையும் வைக்கவில்லை.

நான் ஒரு தனி ஆள் அல்ல, என்னுடன் எம்.பி. நாகராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

ராகுல்காந்தியிடம் நான் பேசியது, அதற்கு அவர் கொடுத்த விளக்கம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெங்களூருவுக்கு சென்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்து ஆலோசனை நடத்த உள்ளேன். அதன்பிறகு அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இது காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினை. இதனை 4 சுவர்களுக்குள் பேசி முடிக்க வேண்டும். எந்தவொரு வி‌ஷயத்தையும் பகிரங்கமாக தெரிவிக்க முடியாது. மல்லிகார்ஜுனகார்கே மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை.

இந்த நிலையில் எம்.பி. பட்டீல் நாளை (11-ந் தேதி) பெங்களூருவில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில் மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ள 40 எம்.எல்.ஏ.க்கள்வரை கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்