கபினி மற்றும் ஹேரங்கி அணைகள் 2 நாளில் நிரம்பும்..!

Default Image

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கபினி மற்றும் ஹேரங்கி அணைகள் 2 நாளில் நிரம்பும். இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம்  காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள குடகு, மைசூரு, சாம்ராஜ்நகர், மண்டியா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மைசூரு மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தின் வயநாட்டில் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று விடிய விடிய மழை நீடித்தது. இன்றும் மேற்கண்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 19,300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்திற்காக அணையில் இருந்து 100 கனஅடி திறக்கப்பட்டது. 2,284 அடி உயரம் கொண்ட அணையில் 2,274அடி தண்ணீர் இருந்தது. அணை நிரம்ப இன்னும் 10 அடி மட்டுமே பாக்கியுள்ளது. இந்த மழை நீடித்தால் 2 நாளில் கபினி அணை நிரம்பி விடும். இந்த அணை நிரம்பி விட்டால் உபரி நீர் நேராக மேட்டூர் அணைக்கு தான் வரும்.

மண்டியா மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட அணையில் 86அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 22, 740 கனஅடி நீர்வரத்து இருந்தது. பாசனத்திற்காக வினாடிக்கு 342 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.குடகு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாகமண்டலாவில் உள்ள திரிவேணி சங்கமம் முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் ஹாரங்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி 2,859 அடி உயரம் கொண்ட அணையில் 2,808.60 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,110 கனஅடி நீர்வரத்துள்ளது. பாசனத்திற்காக வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணையும் 2 அல்லது 3 நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா தாலுகாவில் உள்ள ஹேமாவதி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 2,922 அடி உயரம் கொண்ட அணையில் நேற்று மாலை நிலவரப்படி 2.874.50 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. பாசனத்திற்காக 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருவதால், கபினிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கர்நாடக அணைகள் விரைவாக நிரம்பி வருவதால்,  அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு விரைவில் தண்ணீர் திறந்துவிடப்படலாம். அல்லது  2 நாளில் கபினி நிரம்பி தானாகவே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

‘காவிரியில் நீர் திறப்பு ஆணையமே முடிவு’
திருவாரூரில் நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கூறியதாவது: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை நிலைநாட்ட 142 அடிக்கு நீர் மட்டத்தை  உயர்த்துவதற்கு மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதேபோல் நீண்ட  காலமாக இருந்து வந்த காவிரி பிரச்னையை தீர்ப்பதற்கு தற்போது ஆணையம்  அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கூடுதலாக நீர் கிடைக்கும்  வகையில் கோதாவரி நதி மூலம் நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது.

காவிரி பிரச்னையில் மத்திய அரசின் மீது பொய்யான  குற்றசாட்டுகளை எதிர்க்கட்சிகள் பரப்பி வந்தன. இந்நிலையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதற்கு தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஆணைய செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்ற  எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, ஆணையத்திற்கு முழு அதிகாரம்  வழங்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து  ஆணையம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். இதில் மத்திய அரசுக்கு  எவ்வித தொடர்பும் கிடையாது.

‘80 அடிக்கு குறைவாக இருந்தால் மேட்டூரை திறக்க இயலாது’
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் எம்ஜிஆர் கலை மற்றும் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி துவக்க விழா நடந்தது.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு புதிய கல்லூரி கட்டிட பணியை செங்கல் எடுத்து வைத்து துவக்கி வைத்து பேசுகையில், விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக நாகை மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ.27 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொகை விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும். பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க நாகை மாவட்டத்திற்கு ரூ.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதம் வழங்க வேண்டியிருந்தால் அதுவும் வழங்கப்படும். மேட்டூர் அணையில்  80 அடிக்கு குறைவாக தண்ணீர்  இருந்தால் திறந்து விட முடியாது என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்