கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க OPEC தலையிட வேண்டும் : தர்மேந்திர பிரதான்..!
கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் தலையிட பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ஒபெக் மாநாடு ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் நடைபெறுகிறது. இந்தியாவின் சார்பில் இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான், கச்சா எண்ணெய்க்கு உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் ஏற்கும் வகையிலான விலை நிர்ணயிக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு வெளிப்படையான மற்றும் இணக்கமான சந்தை அமையவேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக அளவிலான பொருளாதாரத்தில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், அதன் வலி இந்தியாவில் உணரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலை தொடர்ந்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் பஞ்சம் ஏற்படும் என்று தெரிவித்த அவர், கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க ஒபெக் தலையிட வலியுறுத்தினார்.