ஒருவழியாக வாயைத்திறந்த பிரதமர் நரேந்திர மோடி…!முழுமையான நீதி என் மகள்களுக்கு நிச்சயம் கிடைக்கும்…!
பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் உன்னவ், காஷ்மீரின் கதுவா பகுதியில் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து மவுனம் கலைத்து பேசியுள்ளார்.
கடந்த இரு நாட்களாக நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் ஒரு பண்பட்ட சமூகத்தில் நடந்த செயலாக இருக்க முடியாது. ஒரு நாடாக, சமூகமாக நாம் வெட்கப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று இந்த நாட்டுக்கு நான் உறுதியளிக்கிறேன். முழுமையான நீதி என் மகள்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என உறுதிகூறுகிறேன் என மோடி ஆவேசமாகப் பேசினார்.
காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் கடந்த ஜனவரி 10-ம் தேதி 8வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அந்த மாதம் 17-ம் தேதி காட்டுப்பகுதியில் சடலமாக அந்தச் சிறுமி மீட்கப்பட்டார். அதேபோல உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 18 வயது இளம் பெண்ணை பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதில் எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு சம்பவங்களும் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி அமைதிப்பேரணியும், போராட்டமும் நடத்தியுள்ளன. அதேசமயம். பிரதமர் மோடி இந்த சம்பவம் குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில், டெல்லியில், டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவரங்கத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக, பிரதமர் மோடி தனது மவுனத்தை உடைத்தார். அவர் பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்தபின் ஏராளமான அரசுகள் ஆட்சிக்கு வந்திருக்கலாம், சென்றிருக்கலாம். ஆனால், டாக்டர் அம்பேத்கரை போற்றும் வகையில் நாங்கள்(பாஜக) செய்த பணிகள் போல் யாரும் செய்ததில்லை. இந்த நினைவரங்கம் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கருக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசுக்கு பின் வந்த காங்கிரஸ் அரசு இந்த நினைவரங்கம் அமைக்க வேண்டியது தொடர்பாக பாஜக அரசு தாயாரித்து வைத்திருந்த கோப்புகளையும், திட்டங்களையும் முடக்கி, மூடிவிட்டது.
ஆனால், 2014ம் ஆண்டு பாஜக அரசு பணி செய்ய மக்கள் வாய்ப்பு அளித்தனர். அதன்பின் அந்த கோப்புகளையும், திட்டங்களையும் நாங்கள் மீட்டெடுத்து பணியாற்றினோம்.
கடந்த 2015-ம் ஆண்டுக்கு பின், தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு பெருவாரியாக குறைத்து இருக்கிறது. தலித் மக்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவதை அதிகப்படுத்தியுள்ளோம்.
ஆனால், காங்கிரஸ் அரசோ நாட்டின் வரலாற்றில் இருந்து அம்பேத்கர் பெயரை அழிக்கும் முயற்சில்தான் ஈடுபட்டது. அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால், இந்த கசப்பான உண்மை உணர்ந்திருக்கும்.
பாபா சாஹேப் அம்பேத்கருக்கு மரியாதை செய்யும் விதத்தில் காங்கிரஸ் செய்த ஒரு பணியைச் சொல்லட்டும். இதை நான் சவால்விட்டுச் சொல்கிறேன்.
கடந்த இருநாட்களாக நாட்டில் பேசப்பட்டு வரும் துர்பாக்கியமான சம்பவங்கள், அறிவார்ந்த, பன்பட்ட சமூகத்தில் நடந்திருக்க வேண்டிய சம்பவங்கள் இல்லை.
ஒருநாடாக, ஒரு சமூகமாக நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். நான் அனைவருக்கும் உறுதி கூறுகிறேன், தவறு செய்தவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது, முழுமையான நீதிக்கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என் மகள்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும் என்பதை உறுதி கூறுகிறேன்.
இந்த சமூகம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராகவும், பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். இந்த மாற்றம் நம் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும்.
நமது வீட்டில் உள்ள பெண்குழந்தைகள் எங்காவது சென்றுவிட்டு தாமதாக வீட்டுக்கு வந்தால், ஏங்கே சென்றாய் என்று கேட்கிறோம். அதேபோலவே மகன்களும் இரவுநேரத்தில் தாமதமாக வந்தால் இதே கேள்வியை கேட்கிறோம். நாம் நமது குடும்பமுறையை வலுப்படுத்த வேண்டும். நமது சமூக மதிப்புகளையும், சட்டம் மற்றும் ஒழுங்கையும் வலிமைப்படுத்த வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.