ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபடுகிறது மத்திய அரசு..!
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான பணிகளை மத்திய அரசு மீண்டும் தீவிரப்படுத்த இருக்கிறது.
50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நட்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், யாரும் வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் விதிமுறைகளில் மாற்றம் செய்து மீண்டும் தனியார்மயமாக்கும் பணிகளை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பல்வேறு முறைகளை ஆய்வு செய்து வருவதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை அரசு வைத்து கொள்ளும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.