எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்தியில் உள்ள மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு ..!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக எல்லையோரம் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பர்க்வால் செக்டாரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதால், ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தாரா சந்த் சென்று பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், “பொதுமக்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்குவது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் எல்லையோரம் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மோடி அரசு முழுமையாக தவறிவிட்டது. பாகிஸ்தானுடனான மோதலை கையாள்வதில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளதால், கடந்த 4 ஆண்டுகளில் அதிக உயிரிழப்பும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது” என்றார்.