என் மீதுள்ள அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை வீரியமாக எதிர்கொள்வேன்- சசிதரூர் ஆவேசம்..!
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக ஜூலை 7-ம் தேதி டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகுமாறு மத்திய முன்னாள் மந்திரி சசி தரூருக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக தன்னை பழிவாங்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ள சசி தரூர், சுனந்தா புஷ்கர் மரணத்தில் எனக்கு எதிரான அடிப்படை ஆதரங்களற்ற பொய் குற்றச்சாட்டுகளை வீரியமாக எதிர்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிதரூர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மிகுந்த ஒத்துழைப்பை அளித்து வருகிறேன். தற்போது எனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரங்களற்றது என்பதுடன், மனித அறிவுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதது என்பதை தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.
நமது நாட்டின் நீதித்துறையின் மூலம் இவ்விவகாரத்தில் வாய்மை வெல்லும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், எனக்கு எதிரான இந்த நடவடிக்கையை வீரியமாக எதிர்கொண்டு, எனது நன்மதிப்பை குலைக்கும் நோக்கத்திலான இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை முறியடிப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.