என்னுடைய ஆட்சி தமிழக மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் !ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நெகிழ்ச்சி !
ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் நடைபெறும் நல்லாட்சியை தமிழக மக்கள் பாராட்டுகின்றனர் என்று கூறினார்.
ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் செயற்குழு கூட்டம் அமராவதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போலியானது. இந்தக் கட்சி தொடர்பான பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளியாகும் புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை. இங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர். இங்கு நடைபெறும் நல்லாட்சியை மனதார பாராட்டுகின்றனர். ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சியினருக்கு இது தெரியவில்லை.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்கு கொடுத்து 5 கோடி மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்த மத்திய அரசுக்கு எதிராக எனது பிறந்த நாளான வரும் 20-ம் தேதி விஜயவாடாவில் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன். இதில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மற்ற அமைச்சர்கள் அவரவர் தொகுதிகளில் உண்ணா விரதம் இருக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் உண்ணாவிர தப் போராட்டம் மேற்கொள்ள வேண்டும். மறுநாள் 21-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சைக்கிள் மூலம் கண்டன ஊர்வலம் நடத்த வேண்டும். 30-ம் தேதி திருப்பதியில் பொதுக்கூட்டம் நடைபெறும். அப்போது ஆந்திராவுக்கு மத்திய அரசு இழைத்த அநீதி குறித்து மக்களுக்கு விவரிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.