எதிர்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு.வாக்குசீட்டு முறையில் தேர்தல் இல்லை ! தேர்தல் ஆணையம் திட்டவட்டம்..!
வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பேசியதாவது: சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் செய்வதற்கு வசதியாக, சோதனை முறையில் செல்போன் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் 780 வீடியோ புகார்கள் பெறப்பட்டன. இந்த வீடியோக்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பது குறித்து விரிவான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அமல்படுத்தப்படும்.
அதேநேரம், இந்த செல்போன் செயலி மூலம் புகார் செய்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இதனால் புகார் செய்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யப்படுவதாக சில கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இதுபோன்ற புகார்கள் ஆதாரமற்றவை. வாக்குப் பதிவு இயந்திரத்துடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் எந்திரமும் கடந்த ஆண்டு முதல் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த எந்திரங்கள் முற்றிலும் குறைபாடற்றவை. இதில் துளியும் சந்தேகப்படத் தேவையில்லை.
மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக புகார் கூறிவரும் எதிர்க்கட்சியினர், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் ராவத் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.