ஆளுநர் வஜுபாய் வாலா கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முன்வருமாறு எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. தனிப்பெரும் கட்சியாக 104 எம்எல்ஏக்களை பாஜக கொண்டுள்ளதால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து எடியூரப்பா கோரிக்கை வைத்தார். அதே போன்று மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமியும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணியுடன் பெரும்பான்மைக்கு தேவையானதை காட்டிலும் அதிகமாக மொத்தம் 116 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் தங்களையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இரு தரப்பினரின் கோரிக்கை தொடர்பாக சட்ட வல்லுனர்களான சோலி சொராப்ஜி, முகுல் ரோகத்கி ஆகியோரிடம் ஆளுநர் வஜுபாய்வாலா கலந்து ஆலோசனை நடத்தினார். ஆட்சி அமைக்க யாரை ஆளுநர் அழைக்கப் போகிறார் என்று மாலையில் இருந்தே சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. இந்த நிலையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க முன்வருமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். 15 நாட்களில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் எடியூரப்பாவிற்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார். இதையடுத்து காலை 9 மணிக்கு கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க இருக்கிறார்.
வியாழன் காலை எடியூரப்பா மட்டுமே முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், பெரும்பான்மையை நிரூபித்த பின்னரே அமைச்சரவை பதவியேற்கும் என்றும் முரளிதர்ராவ் தெரிவித்தார்.
இதனிடையே எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால், உச்சநீதிமன்றத்தில் முறையிட குமாரசாமி முடிவு தெரிவித்துள்ளார். ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே குதிரை பேரத்திற்கு எம்எல்ஏக்கள் விலை போகாமல் தவிர்ப்பதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிடதியிலுள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே போன்று மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏக்ககளும் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.