எங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்! பாஜகவினர் வீட்டுக்குள் வராதீர்கள்”
கேரள மாநிலத்தில் பாஜகவினருக்கு எதிராக வீடுகளில் காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எங்கள் வீடுகளில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், பாஜகவினர் வாக்கு கேட்டு வீட்டுக்குள் வராதீர்கள் என்று திருவனந்தபுரம், புலியூர், செங்கனூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒட்டப்பட்டு இருந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில், 8 வயது சிறுமி கடந்த ஜனவரி 10-ம் தேதியில் இருந்து காணவில்லை. பின்னர் 17-ம் தேதி கதுவா காட்டுப்பகுதியில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அந்தச் சிறுமிக்கு நடத்தப்பட்ட உடல்கூறு ஆய்வில் அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 3 போலீஸ் அதிகாரிகள், உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதில் பாஜக நிர்வாகிகளும் உள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைதிப் பேரணி நேற்றுமுன்தினம் இரவு நடத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தவறு செய்தவர்களுக்கு உறுதியாக தண்டனை பெற்றுத் தரப்படும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
இதற்கிடையே கதுவா சம்பவத்தின் எதிரொலியாக, கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜகவுக்கு எதிராக வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தன.
திருவனந்தபுரம் அருகே வாமனபுரம், களமச்சல் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் ‘எங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பாஜகவினர் வீட்டுக்குள் வராதீர்கள்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
இந்த போஸ்டர் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து ஆலப்புழா மாவட்டம், செங்கனூர், சேர்தாலாவிலும் பரவியது. தற்போது செங்கனூரில் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் இந்த போஸ்டர் அங்கும் ஒட்டப்பட்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த சம்பவம் குறித்து போலீஸாரிடம் பாஜகவினர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து உள்ளூர் பாஜகவினர் வீடுகளில் சென்று மக்களிடம் பேசி அந்த போஸ்டரை கிழிக்க நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.